Thursday, December 29, 2011

தவிர்க்க வேண்டிய கிரெடிட் கார்டு தவறுகள்!

 

 
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு மாறிவருகிறது.
நாட்டில் கிரெடிட் கார்டுகளின் உபயோகம் குறைந்து, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது ,

2005- 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் விறுவிறுவென்ற வளர்ச்சியை எட்டிய கிரெடிட் கார்டுகள், சமீபகாலமாக சரிவைச் சந்தித்து வருகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு வீழ்ச்சி யடைய, அந்த இடத்தை டெபிட் கார்டுகள் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.
பலரும் பயப்படுவதைப் போல் அல்லாமல், கிரெடிட் கார்டும் ஒரு நல்ல வரப்பிரசாதம்தான். குறிப்பாக, நீங்கள் அதைச் சரியான விதத்தில் பயன்படுத்தும்போது. உங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச பயனைப் பெற நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை  பார்க்கலாம்…
தவணைத் தேதி மற்றும் `வட்டியில்லா காலத்தை’ப் புரிந்துகொள்ளுங்கள்
`வட்டியில்லா காலத்தை’ உங்களின் வசதி போல எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள, ஆகாஷ் என்பவர் பற்றிய உதாரணத்தைப் பார்ப்போம். அவரது கிரெடிட் கார்டில் `வட்டியில்லா காலமாக’ 55 நாட்கள் வழங்கப்பட்டன. ஆனால் தான் ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும்போதும் 55 நாள் வட்டியில்லா காலம் கிடைக்காது என்பதை அபராதத்தின் வலியோடு உணர்ந்தார், ஆகாஷ். உங்களுக்கான பொதுவான அதிகபட்ச கட்டணமில்லா காலம் 55 நாட்கள் என்பதுதான் இதன் அர்த்தம். அதில், பணம் செலுத்தும் சுழற்சி, நீங்கள் செலவழித்த நாள் என்பதெல்லாம் இணைந்துள்ளன.
ஆகாஷுக்கான கிரெடிட் கார்டு அறிக்கையானது, ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி தொடங்கி 30 அல்லது 31-ம் தேதி முடிவடைகிறது. அவருக்கான தவணைத் தேதி, அடுத்த மாதம் 25-ம் தேதி. அதாவது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலிருந்து 55 நாட்களுக்கு தவணையைச் செலுத்தாத போதும் எந்த வட்டியும் விதிக்கப்படாது.
அக்டோபர் 1-ம் தேதியன்று ஆகாஷ் 100 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நவம்பர் 24-ம் தேதி வரை எந்த வட்டியும் விதிக்கப்படாது. எனவே ஆகாஷ் தனது அக்டோபர் 1-ம் தேதியிட்ட கிரெடிட் கார்டு பில்லுக்கு 55 நாட்கள் வட்டியில்லா காலத்தைப் பெறுகிறார். ஆனால் ஆகாஷ் அக்டோபர் 20-ம் தேதி ஒரு பொருளை கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் அவருக்கு வட்டியில்லா காலம் 35 நாட்கள்தான். அக்டோபர் 31-ம் தேதி அவர் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவழித்தால், 25 நாட்களுக்கு அவருக்கு வட்டி கிடையாது.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்காதீர்கள்
வட்டியில்லா காலம் பற்றித் தெரிந்தவர்கள் கூட, கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பணம் எடுப்பதற்கு அது பொருந்தாது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. கார்டில் பணம் எடுத்த நொடியில் இருந்தே `வட்டி மீட்டர்’ ஓடத் தொடங்கிவிடும். பணம் எடுப்பதற்கான கட்டணமாக 3 முதல் 4 சதவீதக் கட்டணமும் விதிக்கப்படும் என்பதையும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.
`குறைந்தபட்சத் தொகை’ விஷயம்
உங்களுக்கான கிரெடிட் கார்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மொத்த நிலுவைத் தொகையில், 5 முதல் 20 சதவீதத் தொகையை `குறைந்தபட்சத் தொகை’யாக தவணைத் தேதிக்கு முன்பாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
அந்தக் குறைநதபட்சத் தொகையைக் கூட நீங்கள் செலுத்தாவிட்டால், தாமதக் கட்டணம் சேர்க்கப்படும். நிலுவைத் தொகை மீதான வட்டி தனி.
இப்போதைக்கு குறைந்தபட்ச தவணைத் தொகையை மட்டும் செலுத்தலாம் என்று நீங்கள் முடிவெடுத்தால், செலுத்தப்படாத நிலுவைத் தொகை அடுத்த பில் சுழற்சிக்கு எடுத்துச் செல்லப்படும். அப்படியே நீங்கள் தள்ளிக்கொண்டே சென்றால், நீங்கள் புதிதாகச் செய்யும் செலவுக்கு `வட்டியில்லா காலம்’ கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்நிலையில் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் ஒரு பொருளை வாங்கினால், அந்த நாளில் இருந்து நீங்கள் வட்டி செலுத்த வேண்டி
யிருக்கும்.
மொத்தத் தொகையையும் செலுத்திச் சரிசெய்யும்வரை இந்நிலை தொடரும். நீங்கள் குறைந்தபட்ச தொகை தவணையை நீங்கள் செலுத்தினாலும், மொத்தத் தொகைக் கான வட்டி விதிக்கப்படவே செய்யும்.
உதாரணத்துக்கு, தீப்தி என்பவரின் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அவரது கார்டுக்கான கிரெடிட் அளவு ஒன்றரை லட்ச ரூபாய். கிரெடிட் கார்டை மிக அதிகளவு பயன்படுத்துபவர் தீப்தி. வழக்கமாக தனது கிரெடிட் அளவில் 80 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்துவார்.
குறைந்தபட்ச தவணைத் தொகையை மட்டும் அதற்குரிய கடைசித் தேதிக்கு முன் செலுத்துவது தீப்தியின் வழக் கம். அதனால் தீப்தி சந்தித்த சங்கடம் என்ன?
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் தீப்திக்கு, குறைந்தபட்சத் தொகையை மட்டும் அதற்குரிய தவணைத் தேதிக்குள் செலுத்தும் பழக்கம் இருந்தது.
அப்படி குறைந்தபட்சத் தொகையை (நிலுவைத்தொகையில் 5 சதவீதம்) மட்டும் செலுத்தியதால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ. 1 லட்சம் செலவு செய்தபோது, கடைசியில் அவர் எவ்வளவு தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டிவந்தது என்பதைப் பார்ப்போம்.
கிரெடிட் கார்டு நிறுவனம் விதித்த 38 சதவீத வட்டி காரணமாக, ரூ. 1.62 லட்சம் என்ற பெருந்தொகையை வட்டியாகச் செலுத்தினார் தீப்தி. அவர் செலவு செய்த ரூ. 1 லட்சத்தையும் சேர்த்தால், அடிப்படைத் தொகையை அவர் `கிளியர்’ செய்ய மொத்தமாகச் செலவழித்தது ரூ. 2.62 லட்சம்.
1 லட்ச ரூபாய்க்கு அடுத்து தீப்தி செய்த செலவுகளை கணக்கிடாமல் செய்யப்பட்ட கணக்கு இது என்பது ஞாபகமிருக்கட்டும்.
கிரெடிட் கார்டும், கிரெடிட் அளவும்
உங்களின் `கிரெடிட்’ நிலைமைக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் செலவையும், திருப்பிச் செலுத்துவதையும் திட்டமிட்டால் கார்டை மிகவும் பலனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்போதுமே உங்கள் கிரெடிட் அளவில் 40 சதவீதத்தைத் தாண்டாமல் இருப்பது நல்லது.
அது, உங்களின் கிரெடிட் அளவு அதிகம். ஆனாலும் நீங்கள் அதையே சார்ந்திருக்கவில்லை. கையில் பணம் இருப்பில் வைத்திருக்கிறீர்கள் என்று காட்டும். அது உங்களுக்கு ஒரு நல்ல கிரெடிட் மதிப்பை பெற்றுத் தரும். கிரெடிட் கார்டை மோசமாகப் பயன்படுத்துவது, அந்த மதிப்பைச் சிதைக்கும். அது, எதிர்காலத்தில் நீங்கள் ஏதாவது ஒரு கடன் பெற முயலும்போது பாதிப்பை ஏற்படுத்தும். அல்லது அதிகபட்சத் தொகையை வட்டியாக அழ வேண்டியிருக்கும்.
இதுவரை தெரிவிக்கப்பட்ட அடிப்படைகளைப் புரிந்து, புத்திசாலித்தனத்தோடு கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் கிறுகிறுப்பு ஏற்படாது.

No comments:

Post a Comment