Saturday, December 31, 2011

கோடியில் பணத்தை சுருட்டிய கோழி நிறுவனம் மூடல்

 சென்னிமலையில் நாட்டுக்கோழி வளர்க்கவும், தேங்காய் உடைக்கவும் ஒப்பந்த அடிப்படையில், சில கோடி டெபாசிட் பெற்ற நிறுவனம், திடீரென மூடப்பட்டது.





ஈரோடு மாவட்டம், சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில், நவம்பர் 25ம் தேதி ஒரு மாடியில் கடை வாடகைக்கு எடுத்து, டேபிள் சேர் மட்டுமே முதலீடாக வைத்து, "நந்து சிக்கன்ஸ் அன்டு கேட்டில் பார்ம்ஸ்' மற்றும், "நந்து ஆயில் கோக்கனட்' என்ற பெயரில், ஒரு நிறுவனம் துவக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் தேங்காய் உடைத்து, பருப்பு எடுத்து விற்பனை செய்தல் போன்றவைக்காக டெபாசிட் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. சுற்றுப்பகுதியினர் போட்டி போட்டு பணத்தை செலுத்தினர்.




சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சிவக்குமார் சில நாட்களுக்கு முன் நேரில் விசாரித்தார். விசாரணையின்போது, 1.50 லட்ச ரூபாய் செலுத்தினால், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம், 3 ஆண்டுக்கு தருவதாகவும், இதற்காக வாரந்தோறும் அவர்கள் கொடுக்கும் தேங்காயை உடைத்து பருப்பு எடுத்து தரவேண்டும். 2 லட்ச ரூபாய் செலுத்தினால், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம், 3 ஆண்டுக்கு தருவதாகவும், இதற்காக ஒப்பந்தம் செய்து பணம் கட்டியவர்கள், 300 நாட்டுக் கோழி குஞ்சுகளை வளர்த்து தர வேண்டும். தவிர, முதலீட்டாளர்களுக்கு பல ஆயிரங்கள் போனஸ், ஊக்கத்தொகை வழங்குவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.




"அரசு அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை எடுப்பதாக' இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, 15 நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தனர். இந்நிலையில், நேற்று அந்நிறுவனம் மூடப்பட்டது.சென்னிமலை பகுதியில், பணம் செலுத்தியவருக்கு இதுவரை நாட்டுக்கோழி, தேங்காய் என ஏதும் வழங்கவில்லை. இந்நிறுவனத்தில் இருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, முதலில், "கடையை நடத்தும் நந்து பேசுகிறேன்' என்றார். பின் பத்திரிகை நிருபர் என்றதும், "முதலாளி இல்லை. வெளியூர் சென்று விட்டார். நான் வேலை செய்யும் பையன், ராஜேஷ் பேசுகிறேன். சென்னிமலை அலுவலகம் தொடர்பாக, ஆடிட் நடப்பதால் மூடி உள்ளோம். விரைவில் திறப்போம்' என்றார்.பணத்தை முதலீடு செய்தவர்கள் பரிதவிக்கின்றனர். போலீசில் புகார் செய்ய முயன்று வருகின்றனர்.

No comments:

Post a Comment