Thursday, December 29, 2011

தனிநபர் கடன்’ பெறப் போகிறீர்களா?


`தனிநபர் கடன்’ (பெர்சனல் லோன்) வேண்டுமா?’ என்று கேட்டு இதுவரை உங்களுக்கு செல்பேசி அழைப்பு வரவில்லை என்றால் அதிசயம்.
அந்த மாதிரி அழைப்பின்போது, `அதெல்லாம் வேண்டாம்’ என்று பட்டென்று நீங்கள் செல்லை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்று சிறு சபலம் எழுந்திருக்கலாம். பணத் தேவை இல்லாதவர் யார்?

`பாதுகாப்பற்ற கடன்’ என்பதால் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
நீங்கள் தனிநபர் கடன் பெறலாம் என்று முடிவெடுத்தால், எந்தெந்த விஷயங்களில் தெளிவு பெற வேண்டும் என்று இவ்வாரம் முதல் பார்க்கலாம்.
முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது?
* நீங்கள் கடன் பெறும் வகையில் சொத்தோ, `செக்ரிட்டி’யோ இல்லாதபோது. உதாரணத்துக்கு, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான `செக்ரிட்டி’யாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக் கடன் பெற இயலாது.
* தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். மாதாந்திரத் தவணையை குறிப்பிட்ட நாட்களில் தவறாது செலுத்த முடியும் என்றால். இல்லாவிட்டால், நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.
* ஒரு அவசரநிலை, அதற்காக உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேளைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இதற்கு குறைவான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். `பிராசஸிங்’ நேரமும் குறைவு.
* உடனடியாக முடிக்க வேண்டிய அவசியத் தேவைகளுக்காக மட்டுமே தனிநபர் கடனை நாடுவது என்று தீர்மானமாக இருங்கள். உங்களின் கடைசி வழியாகவே இது இருக்க வேண்டும். ஆனால் `கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுக்க நினைப்பதற்கு முன் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். உங்களின் `ஜாலியான’ தேவைகளான சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்கு தனிநபர் கடன் பெறுவது சிக்கலில் ஆழ்த்திவிடும்.
தனிநபர் கடன் என்றதும் அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்துதான் ஒட்டுமொத்தக் கடனாகும்.
`பிராசஸிங்’ கட்டணம்:
கடன் கேட்டு அளிக்கும் விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்த, கடன் கோருபவருக்கு இக்கட்டணம் விதிக்கப்படுகிறது. இது பொதுவாக, பெறும் கடன் தொகையில் ஒன்று முதல் 2 சதவீதமாக இருக்கும். சில வங்கிகள் எல்லாத் தொகைகளுக்கும் ஒரு பொதுவான கட்டணத்தை விதிக்கின்றன. கடன் கோரும் விண்ணப்பம், அதனுடன் இணைத்து வழங்கும் ஆவணங்களுடன் ஆரம்பத்திலேயே இத்தொகை செலுத்தப்பட வேண்டும்.
முன்கூட்டிச் செலுத்துவதற்கான கட்டணம்:
கடன் தொகையை அதற்குரிய காலகட்டத்துக்கு முன்பே செலுத்தி முடித்தால், முன்கூட்டிச் செலுத்துவதற்கான கட்டணத்தை (பிரீ பேமண்ட் கட்டணம்) கடன் பெற்றவரிடம் வங்கிகள் வசூலிக்கும். அது, நிலுவையில் உள்ள தொகையில் 2 முதல் 5 சதவீதமாக இருக்கும். பொதுவாக, கடன் பெற்ற குறிப்பிட்ட காலத்துக்குப் பின்தான் `பிரீ பேமண்டுக்கு’ அனுமதி அளிக்கப்படும்.
தாமத அபராதத் தொகை:
மாதாந்திர தவணைத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தாமதித்தால், தவணைத் தொகையுடன் ஒரு தாமத அபராதக் கட்டணத்தை வங்கிகள் விதிக்கும். அது, 2 முதல் 3 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.
காசோலை திரும்பினால்…:
தனிநபர் கடன் பெற்றவர் ஒரு பின்தேதியிட்ட காசோலையை வழங்கி, அது அவரது கணக்கில் போதுமான பணம் இல்லை என்று திரும்பிவிட்டால், அதற்கு ஒரு அபராதத் தொகை விதிக்கப்படும். அந்தத் தொகை, ரூ. 250-ல் இருந்து ரூ. 500-க்கு இடைப்பட்டதாக இருக்கும்.
ஆவணக் கட்டணம்:
கடன் விண்ணப்பத்தைச் செயல்படுத்தும்போது, விண்ணப்பதாரரின் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக ஆவணக் கட்டணம் (டாக்குமென்டேஷன் சார்ஜ்) விதிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள், ஆவணத்தைச் சரிபார்ப்பதற்கு மூன்றாம் தரப்பை நியமனம் செய்கின்றன. இதற்கான கட்டணம் ரூ. 500-ல் இருந்து ரூ. 1000 வரை இருக்கும்.
சரி, அதிகபட்ச அனுகூலங்களைப் பெற, சரியான தனிநபர் கடனைத் தேர்வு செய்வது எப்படி? அதற்குச் சில விஷயங்களை நீங்கள் அலசித் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு அதிகபட்ச அனுகூலங்களை அளிக்கும் தனிநபர் கடனைத் தேர்வு செய்வதற்கு, கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனியுங்கள்.
வட்டி விகிதம்: இது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். அவர்கள் உங்களின் `ரிஸ்க் அளவை’ மதிப்பீடு செய்வதைப் பொறுத்து வட்டியை நிர்ணயம் செய்வார்கள்.
மற்ற கட்டணங்கள்: முன்பே கூறியபடி, பல்வேறு கட்டணங்களை வங்கிகள் விதிக்கின்றன. அவை, நீங்கள் செலுத்தும் ஒட்டுமொத்தத் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வட்டி விகிதத்தை மட்டும் நீங்கள் கவனத்தில்கொள்ளக் கூடாது. ஒட்டுமொத்தமாக எவ்வளவு ஆகும் என்று கவனிக்க வேண்டும்.
கடன் தொகை: பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, வங்கி வழங்கும் கடன்தொகை இருக்குமா என்று பாருங்கள்.
கால அளவும், தவணைகளும்: குறுகிய காலக் கடன் என்றால் மாதாந்திர தவணைத் தொகை அதிகமாக இருக்கும். நீண்டகாலக் கடன் என்றால் மாதாந்திரத் தவணைத் தொகை குறைவாக இருக்கும். ஆரம்பத்தில் பெரிய அளவான தவணைத் தொகையை உங்களால் செலுத்த முடியாது என்றால், அதைக் கவனத்தில்கொள்வதும் முக்கியம்.
எந்த வங்கியில் இருந்து தனிநபர் கடன் பெறுவது என்று தீர்மானிப்பதற்கு முன், மேற்கண்ட விஷயங்களை எல்லாம் நன்கு யோசித்து முடிவெடுங்கள்.
நல்ல வட்டி விகிதத்தைப் பெறுவது எப்படி?
கடன் விஷயத்தில் `கிளீனான’ நிலையைப் பராமரிப்பதே நீங்கள் நல்ல வட்டியில் கடன் பெற உதவும். உங்களின் தொடர்ச்சியான `கிரெடிட் நிலை’யானது, `கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி’ மூலம் பதிவு செய்யப்படுகிறது. அது உங்களுக்கு ஒரு `கிரெடிட் ஸ்கோரை’ வழங்குகிறது. வங்கிகளுக்கு இடையே அந்த `ஸ்கோர்’ பரிமாறிக் கொள்ளப்படுகிறது. உங்களுக்குக் கடன் வழங்குவதா, இல்லையா, என்ன வட்டியை நிர்ணயம் செய்வது என்று தீர்மானிப்பதற்கு வங்கிகள் அதை ஓர் அளவுகோலாகப் பயன்படுத்துகின்றன. நீங்கள் முன்பு கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தியிருந்தால், அது உங்களுக்கு விரைவாகக் கடன் பெற்றுத் தருவதுடன், குறைந்த வட்டி விகிதத்தில் பெறவும் உதவும்.
வாடிக்கையாளரின் விசுவாசத்தைக் கட்டிக் காக்கும் விதத்தில் பழைய வாடிக்கையாளருக்கு முன்னுரிமை கொடுக்க வங்கிகள் விரும்பும். எனவே அவை, குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு `பிராசஸிங் கட்டணம்’, `டாக்குமென்டேஷன் சார்ஜ்’ போன்றவற்றைக் குறைக்கவோ, தள்ளுபடி செய்யவோ கூடும். பிற வங்கி வாடிக்கையாளரை விட, சொந்த வங்கி வாடிக்கையாளருக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கக்கூடும். அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
`தனிநபர் கடன்’ பெறப் போகிறீர்களா? `தனிநபர் கடன்’ தொடர்பாகப் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றைப் போக்கும்விதமாகக் கடந்த மூன்று வாரங்களாக, தனிநபர் கடன் பெற்றவர் திருப்பி எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும், தவறாது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் எவை, சரியான கடனைத் தேர்வு செய்வது எப்படி, அதிகபட்ச அனுகூலங்களை எவ்வாறு பெறுவது போன்ற விவரங்களைப் பார்த்தோம்.
சரி, குறிப்பிட்ட மாதாந்திரத் தவணையைச் செலுத்த முடியும் என்ற தைரியத்தில் கடன் பெற்றுவிட்டீர்கள். ஆனால் `ஈ.எம்.ஐ.’ செலுத்தத் தடுமாறுகிறீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது?
அந்த மாதிரி நிலையில், `பாதுகாப்பற்ற’ கடனான தனிநபர் கடனை, `பாதுகாப்பான’ கடனாக மாற்றிக்கொள்ளுங்கள். அதற்கு வீடு, கார், மிச்சுவல் பண்ட்கள், ஆர்.பி.ஐ. பாண்ட்கள், தங்கம், வங்கி டெபாசிட்கள், ஆயுள் காப்பீட்டு பத்திரம், பங்குகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, கடனை மாற்றியமைக்கும்படி வங்கியைக் கோரலாம். பாதுகாப்பான கடனுக்கான வட்டி விகிதத்துக்கு நீங்கள் மாற்றிக்கொள்ளும்போது அந்த மாதாந்திரத் தவணை உங்களால் செலுத்தக்கூடிய அளவுக்கு உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பாதுகாப்பான கடனாக மாற்றியபின்னும் நீங்கள் நினைத்த வசதியைப் பெறவில்லை என்றால், நீங்கள் உங்கள் சொத்தை தனியாக அடமானம் வைத்துக் கடன் பெறுங்கள். அந்தக் கடனைக் கொண்டு, நீங்கள் பெற்றிருக்கும் தனிநபர் கடனை அடைத்து முடியுங்கள்.

No comments:

Post a Comment