Friday, May 04, 2012

2,000 ஆண்டு பழமை வாய்ந்த கற்படுக்கைகள் கண்டுபிடிப்பு!







செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஓனம்பாக்கம் கிராமம் அருகே, 2,000 ஆண்டுகள் பழமையான, ஐந்து கற்படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், சித்தாமூரிலிருந்து செய்யூர் செல்லும் சாலையில், ஓனம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பூச மலையில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்படுக்கைகள் உள்ளன. மலையில் சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. இங்கு ஒரு கல்லை கிராம மக்கள், கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர். மலைமேல் சுனை ஒன்றும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பாறைகளை வெடி வைத்து தகர்க்கும்போது, மலையில் உள்ள சிற்பங்கள் தேசமடைந்தன.
கருப்பங்குன்று மலை : ஓனம்பாக்கத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை கிராமத்தில், கருப்பங்குன்று என்ற மலை அமைந்துள்ளது. இம்மலையில் ஜைன மதத்தைச் சேர்ந்த 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் சிலை உள்ளது. இது மாமல்லபுரத்தில் உள்ளதைப்போல, குடைவறை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல்புற மலைப்பகுதியில் முதல் தீர்த்தங்கரான அருகதேவர் சிலையும், அதன்மேல் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையும் உள்ளது. இங்கும் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. தற்போது, இம்மலையில் உள்ள செடிகள் வெட்டப்பட்டு, படிகள் அமைக்கப்பட்டு, சிலைகளை ஜைன மதத்தினர் வழிபட்டு வருகின்றனர்.
மலைகளில் ஆய்வு : பூசமலையிலும், கருப்பங்குன்று மலையிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம், தமிழகத்தில் சமணம் குறித்து ஆய்வு செய்து வரும், அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, கல்பாக்கம் சரவணகுமார் ஆகியோர் வந்தனர். இரு மலைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
கண்டுபிடிப்பு : ஆய்வுக்கு பின் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: பழமைவாய்ந்த கருப்பங்குன்று மலையில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்படுக்கைகள், மூன்று இடங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன் இரண்டு இடங்களில் உள்ள கற்படுக்கைகள் மட்டுமே, பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஐந்து கற்படுக்கைகள், வடக்கு நோக்கி உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் படுக்கையில், கணக்கு முறையிலான கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. படுக்கையின் கீழ்பகுதியில் ஜைன சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஜைன சிற்பங்கள் மேற்பகுதியில் உள்ள பாறையில், நீல்வடிவ விளிம்பு செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், 10 மீட்டர் பரப்பளவில் மண் மூடியுள்ளது. மண் மூடியுள்ள பகுதியில், 30 முதல் 40 படுக்கைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலையில் உள்ள செடிகளை வெட்டி அகற்றும்போது கிடைத்த, மண் சிற்பங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. இப்பகுதியில் 1,500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்திருக்கலாம்.
குகைப்பாதை : அருகில் உள்ள பூச மலையில், பந்தக்கால் என்ற குன்றுப்பகுதியில், மேற்கு நோக்கி ஐந்து படுக்கைகளும், தென்மேற்கு நோக்கி ஐந்து படுக்கைகளும், வடக்கு நோக்கி ஒரு படுக்கையும் உள்ளது. இயற்கையான சரிவை துறவிகள் உறைவிடமாகக் கொண்டிருந்தனர். இப்பகுதியில் கல்குவாரி செயல்பட்டதால், இங்குள்ள சிற்பங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கை பகுதிக்கு பின்புறம், கங்கையம்மனை வழிபாடு செய்ய, ஒரு குகைத்தளம் உள்ளது. இந்த குகைத்தளத்தில் கிழக்கு மேற்காக, இரண்டு பாதைகள் உள்ளன. இந்த குகையினுள் சிறிதளவு மட்டுமே, உள்ளே செல்ல முடிகிறது. இங்குள்ள கல் சிற்பங்கள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மண் சிற்பங்கள் ஒன்பது மற்றும் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment