Saturday, March 03, 2012

ஆந்திராவில் தமிழகத்தை விட மோசமாகிறது மின் வினியோகம்

ஐதராபாத் :ஆந்திராவிலும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு 12 நாள் மின் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பல சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், இழுத்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உற்பத்தி குறைந்துள்ளதால், சில தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.


நாட்டிலேயே, முதலீடுகளை அதிகம் கவரும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா, மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு, 1.61 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளால், 37 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன. ஆனால், தமிழகத்தைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் தற்போது கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நேரம் காலம் இல்லாமல், கடுமையான மின் வெட்டு நிலவுகிறது. அறிவிக்கப்பட்ட மின் வெட்டை தவிர, அறிவிக்கப்படாத மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பற்றாக்குறை எவ்வளவு?
ஆந்திர மாநிலத்தின் ஒரு நாள் மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட். தினமும் 2,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. தற்போது, கோடைக்காலம் துவங்கி விட்டதால், தேவைப்படும் மின் தேவைக்கும், கையிருப்பு மின் தேவைக்கும் உள்ள இடைவெளி, மேலும் அதிகரிக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

40 சதவீத மின் வெட்டு
இந்த பிரச்னையைச் சமாளிக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத மின் வெட்டு அமல்படுத்தப்படும் என, ஆந்திர மாநில அரசு சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி முதல், தொழிற்சாலைகள் அனைத்துக்கும், மாதத்தில் 12 நாள், மின் விடுமுறை திட்டம் அமலுக்கு வந்து விட்டது.நடுத்தர மற்றும் சிறு தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, வாரத்துக்கு இரண்டு நாள் மின் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள வார மின் விடுமுறை (ஒரு நாள்) திட்டமும் இதில் சேரும். இவை தவிர, தினமும் மாலை 6 மணியில் இருந்து, 10 மணி வரையும், மின் கட்டுப்பாடு உண்டு.

போராட்டம்
இதனால், ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில சிறு தொழிற் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், மின் கட்டுப்பாட்டை தளர்த்தக்கோரி, உண்ணாவிரதப் போரட்டத்தை துவக்கியுள்ளனர்.

மூடல்
இதுகுறித்து, மாநில சிறு தொழில் கூட்டமைப்பு தலைவர் ஏ.பி.கே.ரெட்டி கூறுகையில், "இப்போதே, சில சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இந்த நிலை தொடர்ந்தால், ஒட்டு மொத்தமாக அனைத்து தொழிற்சாலைகளையும் மூட வேண்டியது தான். மாநில அரசு அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியும் பயன் இல்லை. ஏற்கனவே, எங்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. இத்துடன் மின்வெட்டும் சேர்ந்தால், உற்பத்தியே அடியோடு பாதிக்கப்படும். உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளதை அடுத்து, சில தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் துவங்கி விட்டன'என்றார்.

மாநில அரசு பதில் என்ன?
இது குறித்து, மாநில அரசு தரப்பில்,"ஆந்திராவில் மட்டுமல்ல, பெரும்பாலான மாநிலங்களில் மின் பற்றாக்குறை உள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப மின் தேவையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. கோடைக்காலம் துவங்கி விட்டதால், மின் தேவை மேலும் அதிகரித்து விட்டது. மேலும், விவசாயத் துறைக்கு தினமும், ஏழு மணி நேரம் மின்சாரம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டுமெனில், மின் கட்டுப்பாட்டு திட்டங்களை அமல்படுத்த வேண்டியது, தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது' என்கின்றனர்.

No comments:

Post a Comment