Thursday, February 02, 2012

உடும்பை துன்புறுத்திய உடும்பனுக்கு தடையா!

உடும்பை துன்புறுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி 'உடும்பன்' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 இந்த மனுவுக்கு வரும் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனால் படம் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை 14-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் சூளைமேட்டை சேர்ந்த பி.செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில், "மதுரையைச் சேர்ந்த எஸ்.ஜெகநாதன் என்பவர், 'உடும்பன்' என்ற பெயரில் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராம்ஜி எஸ்.பாலன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு உண்மையான உடும்பை பயன்படுத்தி, அதை துன்புறுத்தி நடிக்க வைத்து காட்சிகள் அமைத்துள்ளனர். வனவிலங்கு பட்டியலில், உடும்பு அரிதான விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த உடும்பை யாராவது வைத்திருந்தால், அது வனவிலங்கு சட்டத்தின்படி குற்றமாகும். எனவே உடும்பை துன்புறுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால், 'உடும்பன்' படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை நீதிபதி லட்சுமிகாந்த் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் நம்பி ஆரூரான் ஆஜரானார். இந்த மனு குறித்து பிப்ரவரி 16-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, 'உடும்பன்' படத்தின் தயாரிப்பாளர் ஜெகநாதன், இயக்குநர் பாலன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்தப் படம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி ரிலீசாகவிருந்தது. ஆனால் இந்த வழக்கு 16-ம் தேதி விசாரணைக்கு வருவதால் படம் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து படத்தின் மாடர்ன் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெகநாதன் கூறுகையில், "நாங்கள் படப்பிடிப்பிற்கு முன்னால் முறையாக வனவிலங்கு நலவாரிய துறையிடம் அனுமதி பெற்று நடத்தியுள்ளோம். மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. உடும்பை துன்புறுத்தவும் இல்லை. இந்த தடைகளை சட்டபூர்வமாக அகற்றி திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக திரையிடப்படும்," என்றார்.

No comments:

Post a Comment