Thursday, February 02, 2012

நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவில் இடம்பெறும் படங்கள்.



நோர்வே நகர வீதியில் வசீகரனும் அவரது நண்பர் உதயாவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு வித்தியாசமான அறிவிப்புப் பலகையைப் பார்க்கிறார்கள். அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று உதயா கேட்க,
"நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது எங்காவது ஒரு இடத்தில் தெருக்கலைஞர்கள் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருந்தால் ஒரு நிமிடம் நின்று அதனை ரசித்து விட்டு உங்களால் முடிந்ததை அவர்களுக்குக் கொடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் அவர்களால்தான் ஒரு நாட்டின் பாரம்பரியமான கலைகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது" என்று எழுதியிருந்தது என்று சொன்ன வசீகரனின் முகத்தில் ஒரு சிந்தனை பளிச்சிட்டது. கலையை, கலைஞர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அந்தக் கணமே முடிவு செய்து தனி நபராக ஆரம்பிக்கப்பட்டது தான் நோர்வே தமிழ்த்திரைப்பட விழா. நோர்வே தலை நகர் ஆஸ்லோ மற்றும் பூஸ்டன் நகரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்ற அந்த விழாவில் தமிழகத்தில் இருந்து பல முன்னணி இயக்குநர்கள் கலந்து கொண்டு அவர்கள் இயக்கிய சிறந்த படங்கள் திரையிடப்பட்டன. நோர்வே தமிழர்களுடன் உலகத்தமிழர்களை மட்டுமல்லாது நோர்வே அரசாங்கத்தையும் கவர்ந்து விட்ட நோர்வே தமிழ்த்திரைப்பட விழா இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து 3-வது ஆண்டாக வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை நடைபெற இருக்கும் நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவில் இந்த முறை தமிழகத்திலிருந்து 'அழகர்சாமியின் குதிரை', 'வெங்காயம்', 'வாகைசூட வா', 'கோ', 'ஆரண்ய காண்டம்', 'எங்கேயும் எப்போதும்', 'போராளி', 'மயக்கம் என்ன', 'பாலை', 'உச்சிதனை முகர்ந்தால்', 'வர்ணம்', 'மகான் கணக்கு', 'நர்த்தகி' ஆகிய படங்களும் பிரான்சிலிருந்து 'தீரா நதி', கனடாவிலிருந்து 'ஸ்டார் 67' ஆகிய படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
சென்னை 4 ஃப்ரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதற்கான முறையான அறிவுப்புகளை வசீகரன் சார்பாக அவருடைய நண்பர் உதயன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஒளிப்பதிவாளர்-இயக்குநர் பாலுமகேந்திரா, "தமிழ்ப்படங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துக்கொண்டிருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. எது நல்ல படம்? என்று கேட்பது எது நல்ல உணவு? என்று கேட்பது போலவே. எவ்வளவோ சிறந்த உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அம்மா கையால் சாப்பிடும் உணவுதான் நமக்கு மிகவும் பிடிக்கும்...ஏனென்றால் அம்மா சமையலில் அவரது கரிசனமும் இருக்கும்...அந்த உணவு நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் ஏற்றதாகவும் ஆரோக்யம் அளிப்பதாகவும் இருக்கும்... அந்த வகையில் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் பார்ப்பவர்கள் மனதில் நச்சினை விதைக்காமலும் அவர்களுக்குள் ஒரு மிருகத்தை தட்டியெழுப்பாததாகவும் இருக்கும் எல்லாப்படங்களுமே நல்ல படங்கள் தான். கமர்சியல் சினிமா நல்ல சினிமா என்று பாகுபாடு கிடையாது. கமர்சியலும் தேவைதான்... கமெர்சியல் வரையறைக்குள் இருந்து கொண்டே நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும். எனது 'மூடுபனி'யும் இன்றும் பேசிக்கொண்டிருக்கும் 'மூன்றாம்பிறை'யும் கமர்சியல் வரையறைக்குள் எடுக்கப்பட நல்ல படங்கள் என்று தான் நான் கருதுகிறேன்... நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவிற்கு எனது வாழ்த்துகள்" என்று பேசினார்.
சமூகக் கருத்துக்களுடன் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திய 'வெங்காயம்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பேசியதாவது, "வெங்காயம் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது கடந்த கால உழைப்பிற்கான அங்கீகாரம் என்றால் அதுவே நாளைய எங்களது சாதனைக்கான அஸ்திவாரமும்... இந்தத் திரைப்படவிழாவிற்கு படங்கள் கலந்து கொள்ள வேண்டிய நிபந்தனைகள் -தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
"திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப்படுத்துவதாக அமையவேண்டும்... இவை மற்ற விழாக்களில் புறக்கணிக்கப்படும் நிபந்தனைகள்... இதன் மூலமே நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவின் தரம் உறுதி செய்யப்பட்டு விட்டது" என்றார்.
'உச்சிதனை முகர்ந்தால்' இயக்குநர் புகழேந்தி பேசும்போது, "படங்களை வெளியிடமுடியாத சூழ்நிலையில் 'உச்சிதனை முகர்ந்தால்' விழாவிற்குத் தேர்வாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சி" என்றார். வரும் பிப்ரவரி 10-ம் தேதி மறுபடியும் 'உச்சிதனை முகர்ந்தால்' திரையிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
'மகான் கணக்கு' கதாநாயகன் ரமணா பேசியதாவது, "சிறிய படங்கள் இந்த அளவிற்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கலந்து கொள்ளும் ஒவ்வொரு படங்களும் ஏதாவது ஒரு பிரிவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார்.
"திருநங்கைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'நர்த்தகி' திரைப்படம் இதுவரை கலந்து கொண்ட எந்த ஒரு உலகத்திரைப்பட விழாக்களிலும் தேர்வாகாமல் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது. சிபாரிசில்லாமல் எந்த விழாக்களிலும் படங்கள் திரையிடப்பட முடியாத நிலையில் படங்களைத் தரத்தின் அடிப்படையில் தேர்வு செய்தது நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவின் சிறப்பம்சமாக இருக்கிறது...வாழ்த்துகள்" என்று 'நர்த்தகி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கேசவன் பேசினார்.
தமிழ்சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்தச் செல்ல வசீகரன் மற்றும் அவரது குழுவினர் எடுத்திருக்கும் இந்த சீரிய முயற்சியில் தானும் பங்கெடுப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் சங்கர் பேசியதாவது, "பிற விழாக்களுக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் தமிழுக்காக, தமிழ்ப்படங்களுக்காகவென்று நடைபெற இருக்கும் நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் விழாவிற்குத் தேர்வான படங்கள் சார்பாக 'வர்ணம்' இயக்குநர் எஸ்.ஏம்.ராஜு, 'பாலை'-இணை இயக்குநர் வெற்றிவேல், 'மகான் கணக்கு'- ரமணா, இயக்குநர் சம்பத் ஆறுமுகம், 'வாகைசூட வா' -ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், 'மயக்கம் என்ன' - எடிட்டர் கோலா பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தைப் பற்றி சுபாஷ்கலியன் இயக்கிய ஆவணப்படமும், 'அன்னக்கிளி' செல்வராஜ் இயக்கிய 'பச்சைக்குடை' என்ற குறும்படமும் திரையிடப்பட இருக்கின்றன. இது தவிர சிறப்பான குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட இருக்கின்றன.

No comments:

Post a Comment