அதிமுக அணியிலிருந்து முற்றிலுமாக தேமுதிக விலகிவிட்ட நிலையில் மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த தனியார் விமானம் ஒன்றில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒன்றாகப் பயணித்தது அரசியல் வானில் புதிய கூட்டணி ஒன்று உருவாவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சந்திப்பும், விமானத்தில் அவர்கள் மூவருக்கும் இடையில் நடந்த கலந்தாலோசனையும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்திருப்பதாக தேமுதிக மற்றும் திமுக தரப்பு முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். தேமுதிக கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக விஜயகாந்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கைக்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் விருதுநகர் சென்றிருந்தனர். மாலையில் தனியார் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்ப விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தை அடைந்தபோது, ஏற்கெனவே ஸ்டாலின் அங்கே பிரமுகர்களுக்கான வி.ஐ.பி. லௌஞ்சில் இருந்தார். ஸ்டாலின் இருப்பது பற்றி திமுக மூத்த நிர்வாகி ஒருவர் விஜயகாந்திடம் தெரிவித்தபோது, அவரும் வி.ஐ.பி. லௌஞ்சிக்கு சென்று ஸ்டாலினை சந்தித்தார். விஜயகாந்தைக் "கேப்டன்' என்று அழைத்து ஸ்டாலின் நட்புப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்தும், ஸ்டாலினும் அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த வி.ஐ.பி. லெளஞ்சில் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் பேசும்போது இரண்டு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் விலகி நின்று அவர்கள் தனிமைக்கு வழிகோலினர் என்றும் மதுரை விமான நிலைய அதிகாரி ஒருவர் நமக்குத் தெரிவித்தார். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது கார்த்தி சிதம்பரமும் அதே விமானத்தில் சென்னை திரும்புவதற்காக வந்து சேர்ந்தார். விமானம் புறப்பட்டதிலிருந்து சென்னை வந்திறங்குவது வரை மூவரும் அன்யோன்னியமாக அரசியல் சூழ்நிலையை விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், விமானத்தில் இருந்து இறங்கும்போது அதிகாரபூர்வமற்ற ஒரு கூட்டணி ஏற்பட்டது போன்ற நட்புடன் அவர்கள் பிரிந்தனர் என்றும் உடன் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் நமக்குத் தெரிவித்தார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருப்பது அரசியல் சூழ்நிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் தாற்காலிக நீக்கத்தை எதிர்க்கும் விதமாக தேமுதிகவுக்கு ஆதரவாக திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான ஞானதேசிகனும் விஜயகாந்துக்கு ஆதரவாகக் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதிமுக - தேமுதிக உறவு முறிந்து விட்டிருக்கும் நிலையிலும், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், ஸ்டாலினுடனான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சந்திப்பு அரசியல் அணி மாற்றங்களுக்கு வழிகோலக் கூடும் என்று திமுக, தேமுதிக தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக ஏற்கெனவே தனது வேட்பாளரை அறிவித்துப் பிரசாரத்தையும் தொடங்கி விட்டிருக்கிறது. மதிமுக தலைவர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய தொகுதி என்பதால் நிச்சயமாக மதிமுக தனது வேட்பாளரை நிறுத்திப் போட்டி போடுவது என்று முடிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் திமுகவும் தேமுதிகவும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தப் போகின்றனவா அல்லது பொது வேட்பாளராக மதிமுக வேட்பாளரை ஆதரிக்கப் போகின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது உடனடியாக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்குப் பெரிய பின்னடைவைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றாலும், மக்களவைத் தேர்தலில் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும் என்று கருத இடமிருக்கிறது.
No comments:
Post a Comment