
இடைவிடாமல் கொட்டித் தீர்த்தால் அது அடைமழை. கட்டுக்கட்டாக கொட்டிக் கொடுத்தால் அது பண மழை. சந்தானத்துக்கு அப்படியொரு சுக்ர திசை இப்போது. அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு
வலைவிரித்து பிடித்து தன் படத்தில் போட்டுவிடுகிறார்கள் பெரிய ஹீரோக்கள். இயக்குநர்களும் தங்கள் படத்துக்கு வியாபார ரீதியில் பக்கபலம் இவர்தான் என்று வளைத்துப் பிடிக்கும் அளவுக்கு இமயம் போல் வளர்ந்துவிட்டார் சந்தானம். உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் நடித்த காமெடி படம் "ஒரு கல் ஒரு கண்ணாடி'. இது வசூலில் சக்கைப்போடு போட்டது. அடுத்து வந்த சுந்தர் சி.யின் "கலகலப்பு' படமும் பெரிய வெற்றி. தொடர் வெற்றியால் மகிழ்ச்சிக் கடலில் நீந்திய சந்தானத்துக்கு கார்த்தியுடன் நடித்த "அலெக்ஸ் பாண்டியனும்', ஆர்யாவுடன் நடித்த சேட்டையும் பெரிய சறுக்கல். படம் ஓடவில்லை என்பது மட்டுமல்ல இரட்டை அர்த்தத்தில் காமநெடி வீசும் காட்சிகள், ஆபாச வசனங்களை பேசுகிறார் என்ற கண்டனம் எழுந்தது சந்தானத்தின் மீது. "இன்னொருத்தர் உன் இடத்தை பிடிக்க நீயே விடாதே. இது மாதிரி படங்களில் நடிப்பதை உடனே நிறுத்திவிடு' என்று நண்பர்கள் சொன்ன அட்வைûஸ கேட்டு சுதாரித்துக்கொண்டு விட்டார் சந்தானம். அதுமாதிரி வந்த 7 படங்களை தவிர்த்துவிட்டார். கோடிக் கணக்கில் கொடுத்தாலும் இனி அந்த மாதிரி படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இப்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் "தில்லுமுல்லு' படத்தில் க்ளைமாக்ஸில் 2 நாள் மட்டுமே நடித்திருந்தாலும் சிவாவும்,சந்தானமும் இணைந்து கலக்கும் காமெடி காட்சிகள் படத்தின் வசூலுக்கு ரொம்பவும் உதவி இருக்கின்றன என்கிறார்கள் படக்குழுவினர். அதேநாளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "தீயா வேலை செய்யணும் குமாரு' படம் சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடுகிறது என்கிறார்கள். தமிழ் சினிமாவில் சாதாரண இடத்தில் இருக்கும் நடிகர் சித்தார்த்துடன் சந்தானத்தை இணைத்து சுந்தர் சி. இயக்கிய விதம் சூப்பர் என்று சொல்ல வைத்து இருக்கிறது. அடுத்து இதே சுந்தர் சி. இயக்கத்தில் விஷாலுடன் சந்தானம் இணைந்து நடித்த "மதகஜராஜா' (எம்.ஜி.ஆர்.) படம் ஜுலை மாத இறுதியில் வெளிவரக் காத்திருக்கிறது. இதில் செத்துப் போன பிணத்தை வைத்துக்கொண்டு காய்களை நகர்த்தி காமெடி ரகளை செய்யும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறாராம் சந்தானம். அவரை எதிர்த்து நின்று தோற்றுப்போவதுடன் படம் முழுக்க பிணமாக நடிக்கும் இன்னொரு அரசியல்வாதி யார் தெரியுமா? சாட்சாத் மனோபாலாதான். வயிறு குலுங்க வைக்கும் காமெடி படம் இது என்கிறார்கள். சந்தானம் நடிப்பில் இதேபோல் வெகுவிரைவில் வெளிவரக் காத்திருக்கும் மற்றொரு படம் "யாயா'. இதிலும் சிவாவும், சந்தானமும்தான் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமா? "ரெட்ஜெயண்ட்' நிறுவனம் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி முதன்முதலாக இயக்கியுள்ள "வணக்கம் சென்னை' படத்திலும் சந்தானமும், சிவாவும் ஜோடி போட்டு கலக்கி இருக்கிறார்கள். அடுத்து ஆர்யாவுடன் சந்தானம் நடிக்கும் "ராஜாராணி' படமும் முடிவடையப் போகிறது. இப்படி சந்தானம் நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியல் எண்ணிக்கை 12க்கும் மேல். சில ஆயிரங்களில் ஆரம்பித்த சந்தானத்தின் சினிமா வாழ்க்கை மெல்ல மெல்ல வளர்ந்து லட்சங்களை தொட்டு இப்போது கோடிகளை எட்டிப் பிடித்துவிட்டது என்கிறார்கள். ஒருநாள் கால்ஷீட்டுக்கு 5 லகரமாக இருந்த சம்பளம் 10 லகரமாக மாறி பிறகு ஒருநாள் நடிப்புக்கு 15 லகரமாக உயர்ந்தது. மார்க்கெட் எகிறிவிட்டதால் இப்படி தயாரிப்பாளர்களே தாங்களாக முன் வந்து கொட்டிக் கொடுத்தார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். இன்றைய நிலவரம்! வெற்றி மீது வெற்றிகளை குவிக்கும் சந்தானத்தின் சமீபத்திய சம்பளம் என்ன தெரியுமா? யார் கேட்டாலும் தலை சுற்றி சாய்ந்துவிட நேரலாம். 10 நாள் நடிப்புக்கு 5 கோடியாம். அப்படியா என்று யாரும் வாய்பிளக்கவில்லை. இவ்வளவு பெரிய தொகை கொடுக்க யாரும் தயங்கவும் இல்லையாம். நான், நீ என்று போட்டி போட்டு காத்திருப்பதாக சொல்கிறார்கள். தமிழ் சினிமா உலகில், ஒரு காமெடி நடிகர் இவ்வளவு பெரிய அளவில் சம்பளம் பெற்றதாக சரித்திரம் இல்லை என்கிறது சினிமா வட்டாரம். இது
சந்தானத்தின் சாதனை! அதிர்ஷ்டத்தின் உச்சம்! வேறு என்ன சொல்ல...?
No comments:
Post a Comment