Monday, April 30, 2012

ஐந்தில் ஒரு பள்ளி மாணவருக்கு ஆஸ்துமா ? : அதிர்ச்சி தகவல்























சென்னை நகரப் பள்ளிகளில், சராசரியாக ஐந்தில் ஒரு மாணவருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தை, ஆஸ்துமா தொடர்பான ஒரு ஆய்வு முடிவு ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும், மே மாதம் முதல் செவ்வாயன்று, உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி,
மயிலாப்பூரில் இயங்கி வரும், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆராய்ச்சி மையம், சமீபத்தில் மயிலாப்பூர், பி.எஸ்., மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 11 முதல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களிடம், ஆஸ்துமா பரிசோதனையை மேற்கொண்டது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1,800 மாணவர்களில், 350 பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. லயோலா கல்லூரி மாணவர்கள் 600 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 10 சதவீதம் பேருக்கு, ஆஸ்துமா பிரச்னை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.



இம்மையத்தின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீதரன் கூறியதாவது:


கணிப்பது எப்படி? : ஒருவரின் வயது, உயரம், பாலினம் ஆகியவற்றை, அடிப்படையாகக் கொண்டு, அவரின் நுரையீரல், ஒரு நிமிடத்தில் வெளியேற்றும் காற்றின் அளவு மற்றும், முதல் வினாடியில் வெளியேற்றப்படும், காற்றின் அளவு ஆகியவற்றை கொண்டு, ஒருவருக்கு ஆஸ்மா உள்ளதா, இல்லையா என்பது கணிக்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில், தாத்தா, பாட்டி, தாய், தந்தை, இவர்களில் யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு, இப்பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். ரத்த சொந்தங்களுக்குள், திருமணம் செய்வதை தவிர்ப்பதன் மூலம், மரபணு வழியாக ஆஸ்துமா வருவதை தடுக்கலாம்.




"டஸ்ட் மைட்', உணவு காரணம் : வீட்டு படுக்கை, திரைச்சீலை, வீட்டில் சேரும் தூசி இவற்றில், கண்ணுக்கு தெரியாமல் இருக்கும், "டஸ்ட் மைட்' எனும் உண்ணி, கரப்பான் பூச்சி, அதிக ரோமம் உள்ள செல்லப் பிராணிகளான நாய், பூனை, கொசு வத்தி, கொசு மருந்து சுருள்கள் போன்ற வீடு சார்ந்த ஒவ்வாமைகள், வாகனப் புகை, சிகரெட் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வேதிப் பொருட்கள் போன்ற, வெளியுலகம் சார்ந்த ஒவ்வாமை, இறால், நண்டு, கருவாடு உள்ளிட்ட கடல்சார் உணவுகள், செயற்கை வண்ணங்கள் நிறைந்த உணவு வகைகள் போன்ற உணவு ஒவ்வாமை, ஆகிய மாசுத் தன்மைகள், ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.


நோயிலிருந்து விடுபடலாம் : ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறுவதன் மூலமும், தொடர் சிகிச்சையின் வாயிலாகவும், ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம். சென்னையில், குறிப்பிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் மேற்கொண்ட ஆஸ்துமா பரிசோதனையின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, சென்னை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பரிசோதனையை செய்ய உத்தேசித்துளோம். இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார்.


ஆஸ்துமா என்றால் என்ன? : ஆஸ்துமா என்பதற்கு மூச்சுத் திணறல் என பொருள் கூறப்படுகிறது. நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லும் மூச்சுக்குழலில் ஏற்படும் சுருக்கம், நாள்பட்ட வீக்கம் மற்றும் அதிக சளி ஆகியவை ஒன்றிணைந்து ஆஸ்துமாவாக உருவெடுக்கிறது.


ஐந்து வயதிற்குட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி சளி பிடிப்பது, மருந்திற்கு கட்டுப்படாத தொடர் இருமல், இரவில் அதிகரிக்கும் இருமல், மாடிப்படி ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு ஆஸ்துமா பரிசோதனை மேற்கொள்வது நல்லது என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment