Friday, March 02, 2012

எண்ணிப்பார்க்க இதுவே நேரம்














மனிதனுக்கு நினைவாற்றலும் வேண்டும்; மறதியும் வேண்டும்; தீயவற்றை மறந்து விடுவதும், நல்லவற்றை நினைவில் வைத்துக்கொள்வதும் நல்ல மனிதனின் அடையாளங்கள். ஆனாலும் இது எல்லாராலும் முடிவதில்லை; என்றாலும் முயற்சி செய்யவேண்டும் அல்லவா?
பெரும்பாலும் தீயவை மட்டுமே நினைவில் வந்து நிற்கின்றன. நல்லவைகளை மறுபடியும், மறுபடியும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. சமயங்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வருவதும் இதனால்தான். இல்லாவிட்டால் அவன் திசைமாறிச் செல்ல நேரிடும் என்று முன்னோர்கள் கருதினர்.
ஐ.நா. அவையின் ஒரு பிரிவாகிய யுனெஸ்கோ சில தினங்களை உலகம் முழுவதும் கொண்டாடும்படி வலியுறுத்தி வருகிறது. ஆண்டுதோறும் அவற்றைக் கொண்டாடி வருவதன் மூலம் மனிதப்பண்பாடும், கலாசாரமும் மறைந்துபோகாமல், தடுக்கவும், மறந்து போகாமல் தொடரவும் செய்ய முடியும் என்பது அதன் நம்பிக்கை.
பிப்ரவரி மாதத்தில் இரண்டு உலக தினங்கள் வந்து போயின. பிப்ரவரி 14 அன்று உலகக் காதலர் தினம்; பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி தினம்.
காதலர் தினத்துக்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. வாலண்டைன் என்பவர் ரோமில் வாழ்ந்த ஒரு மத போதகர். அப்போதைய அரசனாகிய 2-வது கிளாடியஸ் என்பவன் இளைஞர்கள் திருமணம் செய்வதற்குத் தடைவிதித்தான். காரணம், திருமணம் செய்து கொள்ளாதவர்களே போரில் திறம்படப் பணியாற்ற முடியும் என்று அவன் கருதியதுதான்.
இதனைக் கண்டு வாலண்டைன் கொதித்தெழுந்தார். மன்னனின் ஆணையைப் புறக்கணித்து விட்டு, இளைஞர்களுக்கு ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதனால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவரது நினைவாகவே "காதலர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது,
இது உரிமைக்காக உயிர் கொடுத்த தினம். இதனைக் கொச்சைப்படுத்தி கூத்தடிக்கும் தினமாக மாற்றி விட்டனர். பொது இடத்தில் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. இதற்கு வணிக நிறுவனங்களும், ஊடகங்களும், திரைப்படங்களும் தீனி போடுகின்றன.
வாழ்க்கை வேறு, பொழுதுபோக்கு வேறு என்று பாகுபடுத்திப் பார்க்கத் தெரியாத உணர்ச்சிவசப்படும் பருவக் கோளாறை "காதல்" என்று எப்படிக் கூற முடியும்? சமுதாயப் பொறுப்புணர்ந்தோர் இதனை எதிர்ப்பதற்குக் காரணம் இதுவேதான்.
தமிழ் இலக்கியங்களில் "அன்பின் ஐந்திணை' என்று போற்றப்படும் இந்த அகஉணர்வு இரண்டு இதயங்களில் இயல்பாக மலர வேண்டிய ஒன்றாகும். பூ மலர்வது போலவும், பொழுது விடிவதுபோலவும் இது உருவாகி வளருமானால் இதை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால், நம் திரைப்படங்கள் எல்லாம் நாட்டில் காதலைத் தவிர, வேறு சமுதாயப் பிரச்னைகளே இல்லாததுபோல தயாரிக்கப்படுகின்றன. இயக்குநர் சிகரங்களும், இயக்குநர் இமயங்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் இரண்டு இதயங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ஓர் உணர்வு, நடுத்தெருவில் ஆட்டமும், பாட்டமுமாக அனைவருக்கும் முன்னிலையில் சந்தி சிரிக்கிறது.
இங்கு கதாநாயகர்கள் எல்லோருமே வில்லன்களாகவே காட்டப்படுகின்றனர். ""ஐ லவ் யூ" சொல்லச்சொல்லி ஒரு பெண் அடியாள் பட்டாளத்தோடு மிரட்டப்படுகிறாள். இவர்களது இம்சைக்குப் பயந்து அவளும் கூற வேண்டியுள்ளது. இதுதான் காதல் என்பது இதுவரை நமக்குத் தெரியாமல் போய்விட்டதே, என்ன கொடுமை இது?
காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமுதாயக் கட்டமைப்பில், காதலை மட்டுமே சொல்லும் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என்றால் இந்தச் சமுதாய முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது? இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படும் ஒரு சமுதாயம் எப்படித்தான் முன்னேறும்?
இந்தக் காதலர் தினத்தை வரவேற்பவர்கள் கூறும் காரணம், காதல் திருமணங்கள் பரவினால் சமுதாயத்தில் சாதி வேற்றுமைகள் மறையும் என்பதாகும். உள்ளப்பூர்வமான உண்மையான காதலாக இருந்தால் வரவேற்க வேண்டியதுதான். உடற்பசிக்காக அலைபவர்களால் சமுதாயச் சீர்கேடுகளே பரவும் என்பதால் இதுபற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
"பெண்ணின் பெருமை' என்ற நூலை இயற்றி, பெண்களின் முன்னேற்றத்துக்குப் போராடிய திரு.வி.க., பெண்கள் தனித்து வாழ்வதை விரும்பவில்லை. திருமண வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்றார். காதல் திருமணத்தை வரவேற்றார். விதவைத் திருமணத்தை ஆதரித்தார். குழந்தைத் திருமணத்தை "பொம்மைக் கல்யாணம்' எனக் கடிந்தார்.
கணவனை இழந்த பின் பெண்கள் மங்கல அணிகளைக் கழற்றக் கூடாது என்றார் இராமலிங்க அடிகளார். பிறந்தநாள் முதல் தொடர்புகொண்ட பொட்டையும், பூவையும் எடுக்கக்கூடாது என்றார். பாரதியார் பெண்களின் முன்னேற்றத்துக்காகவே "சக்கரவர்த்தினி' என்ற இதழை நடத்தினார். புதுமைப் பெண்களை வரவேற்றார். ஆனால், மகளிர் உரிமை என்ற பெயரால் நடத்தப்படும் ஒழுக்கக் கேட்டை ஒருவரும் வரவேற்கவில்லை.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று போர் முழக்கம் செய்தார் பாரதியார். அவர்கள் காலம் காலமாய் அனுபவித்த துயரங்கள் போதாதா? இனிமேல் எந்தப் பெயராலும் அவர்கள் இழிவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஒவ்வொருவரும் முழங்க வேண்டும்.
உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்பட்டது. இது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நாளாகும். அறிஞர்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டிருந்த இதனை அனைத்துலக மக்களும் வரவேற்கின்றனர்.
மொழி என்பது கருத்து பரிவர்த்தனைக்கான ஒரு சாதனம். எனினும், கால வளர்ச்சியில் தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது. ஓர் இனத்தின் அடையாளமாகி விட்டது. மனித வரலாற்றை ஆய்வதற்கும் அவர்களது தாய்மொழியே வழிகாட்டியாக அமைகிறது.
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பதுபோல அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. "எனது தாய்மொழி நாளை இறந்து விடுமானால் நான் இன்றே இறந்து போவேன்' என்று ரசூல் கம்சுதோவ் கூறினார். அவரது தாய்மொழி மிகச் சிறுபான்மையினரால் பேசப்படும் சோவியத் மலைநாட்டு மொழியான "அவார்' மொழியாகும்.
சீனத் தத்துவஞானி கன்பூசியஸிடம் (கி.மு. 551-478), "பெரியீர்! சமுதாயத்தை ஆளும் பொறுப்பு உம்மிடம் விடப்படுமானால் நீவீர் யாது செய்வீர்?' என்று வினவப்பட்டபோது, அவர் கூறிய விடை சிந்திக்கத்தக்கது.
"நான் முதலில் மொழியைத் திருத்துவேன், அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். நீதி தடுமாறும். மக்கள் செய்வது அறியாமல் குழப்பம் அடைவர்' என்று கூறினார்.
அரசாங்க நிர்வாகத்துக்கு மொழி எவ்வளவு இன்றியமையாதது என்பது இதன் மூலம் அறியலாம். ஒவ்வொரு அரசாங்கமும் ஓர் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வதற்குக் காரணமும் அதுதான். மொழியின் மூலமாக ஆட்சியதிகாரத்தைப் பரப்பிய ஆங்கிலேயரின் உத்தியை அரச தந்திரங்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திய மாநிலங்கள் மொழி வழியாகப் பிரிக்கப்பட்டதும் அதனால்தான். மனித நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்டுவதும் மனிதன் பேசும் மொழிதான். இதன் மூலமே கவிதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும், இதிகாசங்களும், புராணங்களும் வெளிப்பட்டன.இதன் வளர்ச்சிக்கு வந்த கல்வெட்டுகளும், செப்பேடுகளும் வரலாற்றுக்குத் துணை நின்றன.
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பதன் மூலம் கல்வியின் அருமையை அறியலாம். இந்தக் கல்விக்கும் மொழியே ஆதாரமாகும். மொழியில்லாமல் கல்வியைத் தருவது எப்படி? தாய்மொழி மூலம் கற்பதே சாலச்சிறந்தது என்பது உளவியல் ஆய்வாளர்களின் முடிந்த முடிவாகும்.
"இலக்கியச் சுவையுள்ள நம் இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அளவுக்கு ஆங்கிலத்தையும் மற்ற மொழிகளையும் கற்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால், எந்த ஓர் இந்தியனும் தாய்மொழியை மறப்பதையோ, வெறுப்பதையோ, தாய்மொழிக்காக வெட்கப்படுவதையோ நான் விரும்பவே மாட்டேன் என்று காந்தியார் உறுதிபடக் கூறினார்.
யார்கூறினால் என்ன? மனித சமுதாயம் நன்மைகளையும், உண்மைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது. உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக மதிக்கப்படும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் அதன் பயன்பாடு எப்படியிருக்கிறது?எண்ணிப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வருகிறது.
1957-ம் ஆண்டு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. இன்னும் அரசாங்க நடவடிக்கைகள் ஆங்கிலத்தில்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், "அரசுத் துறைகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும்' என்று ஆங்கிலத்தில்தான் அறிவிக்கைகள் வெளிவருகின்றன. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தமிழில்தான் கையொப்பம் இடவேண்டும் என்ற அரசாணையிருந்தும் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை.
""விழாக்கள் கொண்டாடுவதில் கவர்ச்சி மிகுந்தது நம் நாடு. புகழ் பாடுவதிலும், பூசைகள் நடத்துவதிலும் வல்லவர்கள் நாம். ஆனால், நாம் யாருக்காக விழா நடத்துகிறோமோ அவர்கள் கூறுகிறபடி நடக்கிறோமா என்றால் அதுதான் இல்லை' என்று அண்ணா முதலமைச்சராக இருந்தபோது காந்தியார் பிறந்த நாளில் குறிப்பிட்டார்.
காந்தியத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகிறவர்கள் எளிமையை மறந்து படாடோபமாக வாழ்வதையும், புத்தரையே வணங்குவதாகக் கூறுபவர்கள் லட்சக்கணக்கான மக்களை இனப்படுகொலை செய்ததையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்துவதும் இப்படித்தான் இருக்கிறது.
உலகின் முதன் மொழி என்றும், மூத்த மொழி என்றும், முழங்குவதால் பயன் என்ன?அதன் வளர்ச்சிக்கு நமது பங்களிப்பு ஏதேனும் உண்டா? தமிழை வளர்ப்பது இருக்கட்டும், இருப்பதையாவது காப்பாற்ற வேண்டாமா? எதுவும் செய்யாமல் வாய்ச்சொல் வீரர்களாகவே வலம் வருவதா?
இருட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதைவிட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது நல்லது என்பது அறிஞர்களின் கருத்தாகும். இந்த இனிய நாளில் இவற்றை எண்ணிப் பார்ப்பது தாய்மொழிக்கும், தாய்நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லதுதானே!

No comments:

Post a Comment