Tuesday, February 14, 2012

'பொதிகை'யில் மலர்ந்து, பிப்ரவரி 14ல் இணைந்த இரு மனங்கள்!










வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதுண்டு. யாரை எந்த நேரத்தில் எப்போது சந்திப்போம் என்பதை யாராலும் கூற முடியாது. அதுபோலத்தான் சாதாரண நேர்முகத்தேர்வுக்கு வந்த இடத்தில் சந்தித்த ஒருவரே பின்னாளில்
தனது வாழ்க்கைத் துணையாக வருவார் என்பதை யாருமே எதிர்பார்க்க முடியாது. அதை விட சுவாரஸ்யமாக, காதலர் தினத்தன்று அந்த கல்யாணம் நடக்கும் என்பதையும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.



ஆனால் சென்னையைச் சேர்ந்த வேங்கடபிரகாஷுக்கும், பூங்குழலிக்கும் இடையே நடந்த அந்த திருமண பந்தம் நிச்சயம் விசேஷமானதுதான். காதலில் மலர்ந்து பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்த இந்தக் காதல் கதை சுவாரஸ்யமானது. இருவருமே பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணியாற்றுபவர்கள். அவர்களின் திருமணம் குறித்து அவர்களிடமே கேட்டோம்..


பொதிகையில் மலர்ந்த முதல் சந்திப்பு..


கல்லூரி காலத்திலேயே பிரபலமாக வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதனை நிறைவேற்றுவதைப் போல பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளருக்கான நேர்முகத் தேர்வு அந்த சமயத்தில் நடைபெற்றது.


ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற அந்த நேர்முகத்தேர்வில் நாங்கள் இருவரும் பங்கேற்றோம். அப்பொழுது தெரியாது. இந்த நேர்முகத் தேர்வு வாழ்க்கை ஒப்பந்தத்தில் இணைவதற்கான ஒரு முன்னோட்ட நேர்காணல் என்று. இருவருமே தேர்வானோம். செய்திகள் வாசிப்பது ஒரு பகுதி நேரத் தொழில்தான் என்றாலும் படிப்பில் கவனம் செலுத்தினோம்.


கால மாற்றத்தினால் இருவரின் பணிச்சூழலும் மாறியது. பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணி கிடைத்ததால் இருவரும் பிரிய நேரிட்டது. அப்பொழுது தெரியாது இந்த பிரிவு மிகப்பெரிய பந்தத்தில் எங்களை இணைக்கும் என்று.


திருமணத்திற்குப் பின்னர் வந்து சேர்ந்த காதல்


காலங்கள் கடந்தன. இருவரின் வீட்டிலும் திருமணப் பேச்சு அடிபட்டது. பெற்றோர்களின் ஒப்புதலோடு எங்களின் திருமணநாள் குறிக்கப்பட்டது. அந்த நாள் உலகமே கொண்டாடும் காதலர் தினமாகிப் போனதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆம் எங்கள் திருமண நாள் உலக காதலர்கள் கொண்டாடும் பிப்ரவரி 14. நிச்சயம் செய்யப்பட்டு மணநாளுக்காக மூன்று மாத காத்திருப்பு என்பது எங்களுக்குள் ஒரு யுகம் போல தோன்றியது. அப்பொழுதுதான் உணர்ந்தோம் இருவருமே நிஜமாகவே காதலிக்கிறோம் என்று.


அந்த நாளும் வந்தது. சுற்றமும் நட்பும் சூழ எங்களின் திருமணம் காதலர் தினத்தில் நிகழ்ந்தேறியது. கடந்த ஆண்டு இதே நாளில் கைத்தலம் பற்றினோம். இதோ ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. இதுபோல ஒரு இல்லறத்துணையை சந்திக்க வைத்து வாழ்க்கையில் இணைத்த இறைவனுக்கு நன்றி!


காதலர் தினத்தில் இணைந்த நாங்கள் இனிய காதல் நினைவுகளோடு வாழும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தங்களின் இனிய பிளாஷ்பேக்கை சுருக்கமாக சொல்லி முடித்தனர், காதலர் தினத்தன்று இல்லற பந்தத்தில் இணைந்த வேங்கடபிரகாஷ்-பூங்குழலி தம்பதியினர்.


நாமும் வாழ்த்துவோம்...!

No comments:

Post a Comment