Monday, January 23, 2012

வங்கி மாறும் வசதி ரிசர்வ் வங்கி எதிர்ப்பு




 சேமிப்பு கணக்கு எண் மாறாமல், வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி அளிக்க ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வங்கியை மாற்றுவதால் வாடிக்கையாளருக்கு லாபமில்லை; வங்கி சேவையை
 செல்போனுடன் ஒப்பிட முடியாது என்று அது தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மத்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டத்தில் செல்போன் எண் மாறாமல் நிறுவனம் மாறுவது போல, சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றும் வசதி ஏற்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி தர மத்திய நிதி அமைச்சகம் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

இதன்மூலம், ஒரு வங்கியில் இருந்து சேமிப்பு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுவது எளிதாகும். வாடிக்கையாளரின் அடை யாள குறியீடு, வாடிக்கையாளரை அறியும் விதிமுறைகள் (கேஒய்சி), கணினி மூலம் இணைக்கபட்ட வங்கி சேவை (கோர் பாங்கிங்) ஆகியவற்றை வங்கிகள் ஒருங்கிணைப்பதன் மூலம் சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வங்கி மாறும் சேவை அளிக்க முடியும்.

ஒவ்வொரு முறை வங்கி கணக்கு தொடங்கும்போதும் கேஒய்சி விதிமுறைகளின் கீழ் ஆவணங்களை அளிக்க தேவையிருக்காது. இதனால், வாடிக்கையாளருக்கு பயன் கிடைக்கும். சேமிப்பு கணக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டி காரணமாக வங்கி சேவையும் மேம்படும் என்று நிதி அமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், ‘வங்கி சேமிப்பு கணக்குகளை செல்போன் சேவையுடன் ஒப்பிட முடியாது. வங்கியை மாற்றுவதால் வாடிக்கையாளர்களுக்கு பயன் ஏற்படாது. இதுபற்றி அரசுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறுகின்றன.

No comments:

Post a Comment