Sunday, January 29, 2012

எர்ன்ஸ் அன்ட் யங் நிறுவனத்தின் ஆய்வு முடிவு முதலீட்டுக்கு சிறந்த இடம் இந்தியா





மும்பை: வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சிறந்த இடமாக இந்தியா தொடர்ந்து நீடிப்பதாக எர்ன்ஸ் அன்ட் யங் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு விவரம்:
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா, உலகின் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் வெளிநாட்டு நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்து, ஸி2.54 லட்சம் கோடியாகி உள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்ச அளவாகும். இதே காலத்தில் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து 864 ஆகி உள்ளது. 

சர்வதேச நிதிநெருக்கடியால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. எனினும், இந்தியா நிலைமையை திறமையாக கையாண்டது. இதனால் பாதிப்பு மிதமாக இருந்தது. இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதே இதற்குக் காரணம். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, குறைவான சம்பளத்துக்கு ஆள் கிடைப்பது உள்ளிட்ட பல சாதகமான அம்சங்கள் உள்ளன. எனவே, இனி வரும் காலங்களிலும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். எனினும், உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, சட்ட நடைமுறைகளில் உள்ள குறைபாடு உள்ளிட்ட சில பிரச்னைகள் தடையாக உள்ளன. இவ்வாறு எர்ன்ஸ்ட் அன்ட் யங் உயர் அதிகாரி பரோக் டி பல்சரா தெரிவித்தார். 

அதேநேரம், கடந்த டிசம்பர் 2011 வரையிலான காலாண்டு நிலவரப்படி, பொருளாதார வளர்ச்சி பற்றிய இந்திய நிறுவன அதிகாரிகளின் நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டில் 88 சதவீதமாக இருந்த நம்பிக்கை, இப்போது 50 சதவீதத்துக்கு சற்று கூடுதலாக உள்ளது.

No comments:

Post a Comment