Friday, January 20, 2012

இதப்படிங்க முதல்ல வங்கியின் தவறு பள்ளி ஆசிரியர் சேமிப்பு கணக்கில் 49,000,00,00,000 ரூபாய்...


கொல்கத்தா : உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் திடீரென பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? சூப்பர் அதிர்ச்சி அடைந்து அப்படியே மயக்கம் போட்டிருப்பீர்கள்தானே...   மேற்கு வங்க பள்ளி ஆசிரியர் வங்கி சேமிப்பு கணக்கில், இப்படிதான் பல ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு காட்டியது. பார்த்தவருக்கு அதன் பூஜ்யங்களை எண்ணியே தலை சுற்றியது. எவ்வளவு பணம் இருப்பு காட்டியது தெரியுமா?

49,000,00,00,000 ரூபாய்.  பூஜ்யங்களை எண்ணி எண்ணி மண்டை காய்கிறதா? மேலே படியுங்கள் இந்த காமெடி சம்பவத்தை...  கொல்கத்தாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாரிஜாத் சாஹா, அரசு வங்கி கிளை ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார். அதற்கு ‘நெட் பேங்கிங்’ வசதியையும் பெற்றுள்ளார். இவரது மாத சம்பளம் 35 ஆயிரம் ரூபாய். சேமிப்பு கணக்கில் அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் வைப்பது வழக்கம்.  சமீபத்தில் வங்கி கணக்கில் இருப்பு என்ன என்று பார்க்க நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தினார். வங்கி வெப்சைட்டில் யூசர் நேம், பாஸ்வேர்டு பதிவு செய்து தன் கணக்கு பக்கத்தை திறந்தார். பார்த்தவருக்கு கண்கள் இருண்டு விட்டது. பத்தாயிரம் ரூபாய்தானே கடைசியாக கணக்கில் இருப்பு இருந்தது. இப்போது ஏகப்பட்ட பூஜ்யங்கள் போட்டு கோடிகளில் அல்லவா இருப்பு காட்டுகிறது என்று குழம்பினார்.

  தன் கணக்குதானா என்றும் சந்தேகம் வந்து விட்டது. மீண்டும், மீண்டும் இருப்பை பரிசோதித்தார். ஓராண்டு கணக்கு முழுவதும் மீண்டும் ஒரு முறை ‘பேலன்ஸ்’ பார்த்துக் கொண்டார். எல்லாம் சரியாகவே இருந்தது. கடைசி ‘என்ட்ரி’ மட்டும்தான் தலை சுற்றியது. அந்த பதிவில் மொத்த இருப்பு என்று காட்டப்பட்டிருந்த தொகை 49 ஆயிரம் கோடி ரூபாய். தனக்குள் சிரித்துக் கொண்டார். படுதிடமான ஆசாமி. டென்ஷனே ஆகவில்லை. ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று உணர்ந்து, அதை நினைத்து இப்படி கூட வங்கி ஊழியர்கள் இருப்பரா என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

  வங்கியில் பணியாற்றும் தனது நண்பருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, ‘என்னப்பா, வங்கியில் ஏகப்பட்ட பணம் இருக்கிறது போல; எனக்கு வேறு வாரி விட்டுட்டீங்க...’ என்று கிண்டல் அடித்தார். விஷயத்தை சொன்னதும் நண்பருக்கும் தூக்கிவாரி போட்டது. அதிகாரிகளிடம் விஷயத்தை அவர் சொல்ல, சாஹாவை அவர்கள் அழைத்து பேசினர். யாரிடமும் விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று மட்டும் கூறினர். மும்பையில் உள்ள வங்கி தலைமையக அதிகாரிகள் இப்போது விசாரணை செய்து வருகின்றனர்.

‘அன்கிளியர்டு’ தொகையாம்
வங்கி அதிகாரிகள் சொல்வது என்ன? ‘சாஹா வின் கணக்கில் எப்படி இந்த அளவு இருப்பு காட்டியது என்பது தெரியவில்லை. இது கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டிருக்கலாம். கணக்கில் இருப்பு காட்டினாலும், அவரால் அந்த பணத்தை பயன்படுத்த முடியாது. அது வெறும் ‘அன்கிளியர்டு’ தொகைதான்’.

பட்ஜெட் தொகையை போல...

கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கீடு செய்த தொகை 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இந்த தொகையை நெருங்கி விட்டது, ஆசிரியர் சாஹாவின் வங்கி கணக்கு இருப்பு என்றும் பிபிசி கிண்டல் அடித்துள்ளது.

பிபிசி அடித்த கமென்ட்

கொல்கத்தாவில் உள்ள பிபிசி நிருபருக்கு விஷயம் தெரியவர, அவர் சாஹாவை சந்தித்து கேட்டார்.  ‘இந்த விஷயம் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் என்று வங்கியில் சொல்லி விட்டனர். ஆனால், ஒரு வகையில் நான் அதிருஷ்டசாலிதான். கோடீஸ்வரராகவில்லை என்றாலும், என் கணக்கில் 49 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு  காட்டப்பட்டது மறையவே, மறையாது. இன்னொரு பயம் என்னவென்றால், வருமானவரித் துறை என்னிடம் இதற்கு கணக்கு கேட்குமோ என்றுதான்’ என்றும் ஜோக்கடித்தார்.  ‘பாதுகாப்பான வங்கி’ என்று சொல்லிக்கொள்ளும் இந்த வங்கி, இந்த தவறுக்கு பதில் சொல்ல மறுத்து விட்டது’ என்று பிபிசி கமென்ட் அடித்துள்ளது.

No comments:

Post a Comment