Monday, January 30, 2012

வருமான வரி விலக்கு உச்சவரம்பை .ரூ.2 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்





 மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது வருமான வரி விலக்கு உச்சவரம்பை .ரூ.2  லட்சமாக உயர்த்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012,13ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய அவர், இப்போது வரி விதிப்புகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாக டெல்லியில் நேற்று தகவல் வெளியானது.

நேரடி வரிமுறை மசோதா 2010ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரி அடுக்குகளை (ஸ்லாப்) குறைத்து, வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வழி செய்யப்பட்டது. அதன்படி, வருகிற பட்ஜெட்டில் வரி விலக்கு உச்சவரம்பு இப்போதுள்ள ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது. 
இப்போதுள்ள வரி விதிப்பின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. 

நேரடி வரிமுறை மசோதாவின்படி, ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.  உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வதால் மாத சம்பளக்காரர்களுக்கு வரி விலக்கு ரூ.20,000 கூடுதலாக கிடைக்கும். கடும் விலைவாசி உயர்வு காரணமாக வருமான வரி விலக்கை ரூ.2.5 லட்சமாக உயர்த்தலாம் என பல்வேறு தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment