Saturday, August 13, 2016

வாழையடி வாழை… ஆரோக்கிய வாழ்க்கைக்கு அற்புத மருந்து

 
பாரத தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வாழை மர தோரணம்… வரவேற்பிலும் வாழைதான்… விருந்து உபசரிப்பிலும் வாழைதான்.

வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே எண்ணி வந்துள்ளனர். வாழையில்லாத வீடு பெண் இல்லாத வீட்டுக்கு சமம் என்று சொல்வார்கள். வாழையை வீட்டைக் காக்கும் பெண் தெய்வமாகவே பழங்

காலத்தில் போற்றி வந்துள்ளனர். மங்கள நிகழ்ச்சியென்றால் வாழைக்குத்தான் அதிக பங்கு.

வாழையின் அனைத்து பாகங்களுமே மனித ஆரோக்கியத்தை முன்னிருத்தியிருக்கின்றன. இடி தாங்கியாகவும் வாழையே விளங்குகிறது.

வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டது. குறிப்பாக விஷப் பூச்சிகளின் தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் வாழையை முதன்மையாக நட்டு வைக்கின்றனர்.

வாழை ஒரு கிருமி நாசினியாகும். வாழையின் ஒரு சிறிய கன்றை நட்டு வைத்தால் அதிக பட்ச கன்றுகளுடன் ஒரு குடும்பமாக காட்சி தரும். வாழையை அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேகலி, திரணபதி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

அடுக்கு வாழை, ரஸ்தாளி வாழை, பூவன் வாழை, கருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, நவரை வாழை, நாட்டு வாழை, பசும் வாழை, பேயன் வாழை, மலை வாழை, மொந்தன் வாழை வேள் வாழை, பச்சை வாழை, மோரீஸ் வாழை, கற்பூர வாழை, நேந்திரம் வாழை, சந்தன வாழை, மட்டி வாழை, ரசக்கதலி, கதலிவாழை, மதுரவாழை, சிங்கன் வாழை, கல்வாழை என பல வகைகள் உள்ளன.

வாழையின் மருத்துவப் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் சில மருத்துவப் பயன்களை அறிவோம்.

வாழை இலை

வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

தீக்காயம் பட்டவர்களை வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும்.

வாழைப் பூ

100 கிராம் வாழைப்பூவில்

கால்சியம் – 32 மி.கி.

பாஸ்பரஸ் – 42 மி.கி.

புரதம் – 1.3 மி.கி.

நார்ச்சத்து – 1.3 மி.கி.

மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,

வாழைப்பூ – கால் பங்கு

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

பூண்டுப்பல் – 4

இஞ்சி – 1 துண்டு

நல்ல மிளகு – 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைப் பிஞ்சு

வாழைப் பிஞ்சு மருத்துவக் குணம் கொண்டது. இரத்தக் கொதிப்பை குணப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதைக் குறைக்கும். மூலத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாழைக்காய்

100 கிராம் வாழைக் காயில்

இரும்புச் சத்து 6.3 மி.கிராம்

ஃபோலிக் அமிலம் 16.0 மி.கி

மற்றும் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் ரத்தச் சோகையைப் போக்க வாழைக்காய் சிறந்த மருந்தாகும்.

அதிக ஊட்டச்சத்து கொண்ட இது வாயுவை அதிகரிக்கும் குணமுள்ளதால் உணவில் அளவோடு சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. வாழைக்காயை சமைக்கும்போது அதிகளவு பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்

முக்கனிகளில் இதுவும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகும். வாழைப் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் வழைப்பழத்தில்

நீர்ச்சத்து – 66.4 கிராம்

நார்ச்சத்து – 0.5 கிராம்

கொழுப்பு – 0.3 கிராம்

புரதம் – 1.2 கிராம்

மாவுப்பொருள் – 28.0 கிராம்

சக்தி – 114.0 கலோரி

பாஸ்பரஸ் – 36.0 மி.கி.

இரும்புச்சத்து – 0.8 மி.கி.

சுண்ணாம்புச் சத்து – 16.0 மி.கி.

தையாமின் – 0.05 மி.கி.

கரோட்டின் – 0.78 மி.கி.

ரைபோஃபிளேவின் – 0.07 மி.கி

நியாசின் – 0.5 மி.கி.

வைட்டமின் ஏ – 12.01

வைட்டமின் பி – 0.5 மி.கி.

வைட்டமின் பி2 – 0.08 மி.கி.

வைட்டமின் சி – 0.02 மி.கி.

வைட்டமின் டி – 0.03 மி.கி

வைட்டமின் கே – 0.02 மி.கி

வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்கள்

· மலச்சிக்கலைப் போக்கும்

· உடல் தசைகளை வலுப்படுத்தும்.

· நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் புத்துணர்வு உண்டாக்கும்.

· இருதயம் பலப்படும்

· சீரண சக்தியைத் தூண்டும்

கை கால் நடுக்கம் உள்ளவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப் படி சாப்பிடலாம்.

வாழைத் தண்டு

வாழைத் தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும்.

வாழைத் தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதனுடன் மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும். வாழைத்தண்டு சாறை கொதிக்க வைக்காமல் அருந்துவது தவறு. விஷக்கடி பாதிப்பு உள்ளவர்கள் வாழைத் தண்டு சாறு எடுத்து குடித்தால் விஷ முறிவு உண்டாகும்.

வாழைத்தண்டு – 4 அங்குலம்

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்

சின்ன வெங்காயம் – 4

சீரகம் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு எடுத்து ஒன்றாகச் சேர்த்து சூப் செய்து அருந்தினால் தேவையற்ற உப்பு, கொழுப்புகள் கரையும்.

கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்புப் படிவங்கள் நீக்கிப் பார்வையை தெளிவடையச் செய்யும். வாழைத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தைத் தூண்டி சுறுசுறுப்பு அடையச் செய்யும்.

பித்தத்தைக் குறைக்கும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு சூப் செய்து அருந்துவது நல்லது.

வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும். இந்த மருத்தை அகத்தியர் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அற்புத மருந்து என்று ஆச்சரியம் 1500 நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

வாழை முட்டிக் கிழங்கு

வாழை முட்டியை இடித்து சாறு எடுத்து இலேசாக கொதிக்க வைத்து அருந்தினால் சிறுநீரகத்தை சீராக்கி சிறுநீரைப் பெருக்கும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். மூல நரம்பு வியாதிகளுக்கு வாழை முட்டி சிறந்த மருந்தாகும்.

வாழையின் அரிய பயன்களை அறிந்து அவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோமாக..

No comments:

Post a Comment