பீகாரில் 'சூப்பர் 30' திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற 30 ஏழை மாணவர்களில் இம்முறை 28 பேர் ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வில் (IIT - JEE) தேர்ச்சி பெற்றனர்.
இளம் கணித வல்லுனர் ஆனந்த் குமாரால் நிறுவப்பட்ட ராமானுஜர் கணிதப் பள்ளி மையத்தின் மாணவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளவர்கள்.
திறமையின் அடிப்படையில் ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.
பீகாரின் பாட்னாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி தனது 'ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமெடிக்ஸ்' மூலம் செயல்படுத்தி வருகிறார் ஆனந்த் குமார்.
இந்த முறை 28 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், கடந்த 11 ஆண்டுகளில், 'சூப்பர் 30' மூலம் பயிற்சி பெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்த ஏழை மாணவர்களின் எண்ணிக்கை 300-ஐக் கடந்தது.
"எங்கள் சூப்பர் 30-ல் இம்முறை 28 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள்" என்றார் ஆனந்த் குமார்.
சூப்பர் 30 அளித்த பயிற்சி மூலம் வெற்றி பெற்ற ஏழைக் கூலித் தொழிலாளியின் மகன் பானு கூறும்போது, "பல நேரங்களில் எங்கள் குடும்பத்துக்கு சாப்பிட உணவு கிடைக்காது. அத்தகைய சூழலில் இந்த வெற்றி, ஆனந்த் குமாரின் உறுதுணையால்தான் சாத்தியமானது" என்றார்.
"சூப்பர் 30-ல் பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைத்தவுடனே நான் தேர்ச்சி பெற்றுவிடுவேன் எனப்து எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், அப்புறம்தான் மற்றொன்றும் கிடைத்தது. ஆனந்த் என்ற இன்னோர் தந்தையைச் சொல்கிறேன்" என்று நெகிழ்வாகக் கூறிய அங்கித், விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன்.
டைம் மற்றும் நியூஸ் வீக் இதழ்களில் 'சூப்பர் 30' குறித்து பதிவான பின்பு, உலக அளவில் ஆனந்த் குமாரின் கல்விச் சேவை கவனத்தில் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment