மதுரையில், பள்ளித் தாளாளர் தவறவிட்ட ரூ.3 லட்சத்தை, கண்டெடுத்து கொடுத்த கல்லூரி மாணவருக்கு போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் ரூ.1000 பரிசு வழங்கினார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரபாண்டியன்,67. அப்பகுதியில் பள்ளி நடத்துகிறார். நேற்று முன் தினம் பேரனுடன் திருப்பரங்குன்றம் வங்கி கிளை ஒன்றில், நகைகளை அடகு வைத்து ரூ.4.50 லட்சம் பெற்றார். அதில் ரூ.1.50 லட்சத்தை கொண்டு, வில்லாபுரம் தனியார் நிதிநிறுவத்தில் அடகு வைத்த நகைகளை மீட்டார்.
மீதித்தொகை ரூ.3 லட்சத்துடன் நேற்று முன்தினம் மாலை, கீழஆவணிமூல வீதி புதுமண்டபம் அருகே, பொருட்கள் வாங்க வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது பணப்பை காணவில்லை.
இதற்கிடையே, மாலை 6.30 மணிக்கு, மதுரை ரயில்வே காலனி பொறியியல் கல்லூரி மாணவர் கோபாலமுத்துகிருஷ்ணன்,22, புதுமண்டபம் அருகில் தனது டூவீலரை எடுக்கும்போது, பணப்பை டூவீலர் அருகில் கிடந்தது. இதுகுறித்து அருகில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ரவிச்சந்திரனுக்கு தெரிவித்தார். பணப்பையில் இருந்த போன் எண்ணைக் கொண்டு சோமசுந்தரபாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அவரிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். மாணவர் கோபாலமுத்துகிருஷ்ணனை பாராட்டி, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் ரூ.1000 பரிசு வழங்கினார்.
No comments:
Post a Comment