
என் வாழ்க்கையிலும் பல போராட்டங்களைச் சந்தித்துதான் முன்னணி நடிகராக வந்துள்ளேன் என நடிகர் விஜய் கூறினார்.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள திரையரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள "நண்பன்' திரையிடப்பட்டுள்ளது. புதன்கிழமை காலைக் காட்சியின் இடையில் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. திரையரங்க மேடைக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் புடைசூழ வந்தார். ரசிகர்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் பேசியது: ரசிகர்கள் என்றைக்கும் எனது நண்பர்கள்தான். எல்லோருக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் போன்ற பல உறவுகள் இருக்கும். ஆனால், நண்பன் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம். ஆனால், அனைத்து விஷயங்களையும் நண்பனிடம்தான் பகிர்ந்து கொள்வோம். எனக்கு நண்பன் என்றாலே ஒருவித சந்தோஷம் வந்துவிடும். அவனுக்கென தனிச் சிறப்பு கொடுப்பேன். இந்தத் திரைப்படத்தை மட்டுமல்ல, என்னுடைய எல்லா திரைப்படத்தையும் வெற்றிப் படமாக்குவதற்கு இரவு, பகல் பாராது சுவரொட்டி ஒட்டியும், தோரணம் கட்டியும், பட்டாசு வெடித்தும் எனக்காக ரசிகர்களாகிய நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். எனக்கு ஒரேயொரு சின்ன ஆசை. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் மீது அன்பு செலுத்தும் உங்களுக்காக "நண்பன்' படத்தில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். நான் நடித்த மற்ற திரைப்படங்களில் உள்ள வசனங்களும், இந்த படத்தின் வசனங்களும் மாறுபட்டவை. நண்பன் படத்தில் பேசியுள்ள வசனங்கள், உங்களுக்காக நான் பேசியவைதான். நீங்கள் எல்லோரும் என் நண்பர்கள். உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment