Wednesday, January 04, 2012

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்.


புதுடெல்லி : தரம் குறைந்த, மறுவிற்பனையில் நஷ்டம் அளிக்கக்கூடிய தங்க நகை வாங்கி ஏமாறுவதில் இருந்து மக்களை காக்கும் வகையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தங்கத்தை

 மறுவிற்பனை செய்யும்போது மதிப்பு குறைவதன் மூலம் தரம் குறைந்த தங்க நகை விற்பனை பற்றி பிரச்னைகள் ஏற்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி தங்க நகை சிறுவியாபாரிகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, இந்திய தர ஆணையத்தின் (பிஐஎஸ்) தரக் கட்டுப்பாட்டு சான்றிதழான ஹால்மார்க் முத்திரையை தானாக முன்வந்து நகை வர்த்தகர்கள் பெறும் நடைமுறை 2001ல் அமலுக்கு வந்தது.

ஆனாலும், பல நகை நிறுவனங்கள் ஹால்மார்க் முத்திரை பெறாமல் தங்க நகை விற்பனை செய்கின்றன. இதனால், தங்கத்தை மறுவிற்பனை செய்யும்போது மக்கள் நஷ்டம் அடைவதாக புகார்கள் எழுந்தன. இதை தவிர்க்க இனி தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

இதற்காக மத்திய நுகர்வோர் நல அமைச்சகத்தின் இந்திய தர நிர்ணய ஆணைய சட்டம் 1986ல் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த திருத்த சட்டம் மூலம் மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் ஏமாறக்கூடிய வழியுள்ள தொழில்கள் ஆகியவற்றுக்கு தர நிர்ணய முத்திரையை கட்டாயமாக்க அரசுக்கு அதிகாரம் கிடைக்கும்.

தரத்தை உறுதி செய்ய இப்போது சிமென்ட், மினரல் வாட்டர், பால் பொருட்கள் உட்பட 77 பொருட்களுக்கு பிஐஎஸ் தர முத்திரை கட்டாயமாக உள்ளது. இனி, தங்க நகை உட்பட மேலும் சில பொருட்கள் விற்பனையில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாகிறது.

 தங்க நகை வாங்குவோர் உலகிலேயே இந்தியாவில் அதிகம்.
 2011ல் 878 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்தது.
 தங்க நகை விற்பனை விலை ஒரே மாதிரியாக இல்லாததால் அதன் தரம் பற்றி சந்தேகம் எழுகிறது.

No comments:

Post a Comment