Friday, January 20, 2012

சுய மரியாதையை கைவிடாதீர்கள்.




புகழ் பெற்ற பேச்சாளர் ஒருவர் "சுயமரியாதை" என்கிற தலைப்பில் பேச வந்திருந்தார். அவரது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டமாகக் கூடி இருந்தார்கள்.

தன் கை விரல்களுக்கிடையே நூறு ரூபாய்த் தாளை வைத்துக் கொண்டார். அவர் கையை உயர்த்தி அந்தத் தாளைக் கூட்டத்தினர்க்குக் காட்டினார்
.


இந்த நூறு ரூபாய்த் தாள் வேண்டுபவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார் அவர்.


கூட்டத்திலிருந்த பலரும் கையை உயர்த்தினார்கள்.


"உங்களில் ஒருவர்க்கு இந்த நூறு ரூபாயத் தாளைத் தரப் போகிறேன்" என்ற அவர் அந்த ரூபாய்த்தாளைச் சுருட்டினார். கைகளுக்குள் வைத்துக் கசக்கினார்.


கசங்கிய அந்த ரூபாய்த்தாளை உயாத்திக் காட்டி, "இப்பொழுது இந்த ரூபாய்த்தாள் யாருக்கு வேண்டும்? கையை உயர்த்துங்கள்" என்றார்.


இப்பொழுதும் பலரின் கைகளும் உயர்ந்தன.


"நல்லது. நான் இந்த ரூபாய்த் தாளைச் செய்வதைக் கவனியுங்கள்" என்றபடி அவர் அந்தத் தாளைத் தரையில் எறிந்தார். தன் செருப்புக் காலால் தேய்த்து அதை அழுக்காக்கினார்.


கசங்கிய அந்த நூறு ரூபாய்த் தாளைக் குனிந்து எடுத்தார்.


"இப்பொழுது இந்த ரூபாய்த்தாள் யாருக்கு வேண்டும்? கையை உயர்த்துங்கள்" என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.


மூன்றாம் முறையும் எல்லோருடைய கைகளும் உயர்ந்தன.


உணர்ச்சி பொங்கும் குரலில் அவர், "நண்பாகளே! இந்த ரூபாய்த் தாள் உயர்ந்த பாடம் ஒன்றை உங்களுக்குக் கற்றுத் தந்துள்ளது. இந்த ரூபாய்த் தாளை நான் கசக்கினேன், தரையில் எறிந்து அழுக்காக்கினேன். செருப்புக் காலால் மிதித்து அவமானப்படுத்தினேன்.


இப்படி செய்தும் இந்த ரூபாய்த்தாளின் மதிப்பு சிறிதும் குறையவில்லை. நீங்கள் அனைவரும் இதைப் பெற விரும்பினீர்கள்.


இந்த ரூபாய்த் தாளைப் போல் , உங்கள் வாழ்விலும் பல கொடுமைகள் நிகழலாம். உங்களுக்கு வீழ்ச்சி ஏற்படலாம். அவமானம் ஏற்படலாம். கேவலப்படுத்தப் படலாம். அப்படிப்பட்ட சூழல்களில் நீங்கள் மதிப்பு இழந்து விட்டதாக உணர்வீர்கள்.


ஆனால் உண்மை அப்படி அல்ல. இந்த நூறு ரூபாய் தாளைப் போல என்ன நிகழ்ந்தாலும் உங்கள் மதிப்பு குறைவதில்லை. மற்றவர்களோ, சூழ்நிலைகளோ உங்கள் மதிப்பைக் குறைத்து விட முடியாது. இதை நீங்கள உணர வேண்டும்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

No comments:

Post a Comment