Tuesday, December 27, 2011

ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ஜப்பானுடன் ஒப்பந்தம்?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ள டாலர் பரிமாற்ற (Dollar Swap) ஒப்பந்தம் ஒன்றை ஜப்பானுடன் இந்தியா செய்துக்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.




ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா இன்று இந்தியா வருகிறார். இவரது பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒப்பந்தங்கள் பல கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிக முக்கியமானது டாலர் - ரூபாய் தொடர்பான நட்பு ஒப்பந்தம் ஆகும்.
யோஷிஹிகோவின் பயணம் குறித்து விரிவாக எழுதியுள்ள ஜப்பான் நாளிதழ்கள், இந்தியாவுடன் 10 பில்லியன் (1,000 கோடி) டாலர் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை ஜப்பான் செய்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளன. இதன்படி, எப்போதெல்லாம் ரூபாயின் மதிப்பு சரிகிறதோ அப்போது ஜப்பான் தன்னிடம் உள்ள டாலர் இருப்பின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு அளிக்கும் (Capital Transfer). இத்ன மூலம் ரூபாயின் மதிப்பு அதிக அளவிற்கு சரியாமல் தடுக்க முடியும். இந்த ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் சுமையால் உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து, மூன்றாம் உலக நாடுகளின் சந்தைகளில் செய்துள்ள முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் விலக்கிக்கொள்ளும்போது அந்த நாட்டின் நாணய மதிப்பு சரிகிறது. இதனைத் தடுக்க இப்படியொரு ஏற்பாட்டை செய்துக்கொள்ள இந்தியாவும் ஜப்பானும் முடிவு செய்துள்ளன. இதேபோன்றதொரு ஒப்பந்தத்தை தென் கொரியாவுடன் ஜப்பான் செய்துக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தென் கொரியாவைப் போல் ஆசியக் கண்டத்தில் இந்தியாவையும் ஒரு பெரும் சந்தையாக பார்க்கிறது ஜப்பான். எனவே இந்தியாவுடன் செய்துக்கொள்ளும் டாலர் பரிமாற்ற ஒப்பந்தம் ஜப்பான் பொருளாதாரத்தையும் நிலையாக வைத்திருக்கும் என்று அந்நாடு கருதுகிறது. ஜப்பானைப் பொருத்தவரை இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்க தயாராக உள்ளதென டோக்கியோ செய்திகள் தெரிவிக்கின்றன.
 

No comments:

Post a Comment